நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - TPV10
திருப்பாவை பத்தாம் பாசுரம்
பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!
பொருளுரை:
பாவை நோன்பிருந்து இப்பிறப்பில் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! வாசல் கதவை நீ திறக்காவிட்டாலும் கூட எங்களோடு ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தந்தருளும் தர்ம பரிபாலகனும் ஆவான் !
ராமனாக அவதரித்த காலத்தில், எம்பெருமானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையில்லாச் சோம்பல் கொண்டவளே ! எங்களுக்கு கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!"
பாசுரக் குறிப்புகள்:
'பாவை நோன்பிருந்து கிருஷ்ணானுபவத்தில் திளைக்கலாம் என்று நேற்று கூறி விட்டு இன்று நாங்கள் மிக்க எதிர்பார்ப்புடன் உன் வீட்டு வாசலில் அதிகாலையில் காத்திருக்க, நீயோ கதவைக் கூட திறக்காமல் தனியாக சொர்க்கம் போக திட்டம் போட்டவள் போல தூங்கிக் கொண்டிருக்கிறாயே' என்று ஆண்டாள் விசனப்படுவதிலும் ஒரு நயம் இருக்கத் தானே செய்கிறது!
"சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" எனும்போது, கண்ணன் உறங்கும் பாகவதையின் வீட்டினுள்ளே இருக்கிறானோ என்ற ஐயம் தெரிகிறது. அதாவது, கண்ணன் இருக்கும் இடம் தானே கோபியர்க்கு சொர்க்கம்! சொர்க்கத்தில் இருப்பவள், வீட்டின் கதவைக் கூடத் திறக்காதவள், தங்களுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமுக்கமாக இருப்பது வெளியில் உள்ள கோபியருக்கு பொருமலை ஏற்படுத்துமா, இல்லையா!
"நாற்றத் துழாய்முடி நாராயணன்" என்ற பிரயோகம் கண்ணன் வீட்டின் உள்ளே இருக்கிறானோ என்ற (வெளியில் காத்திருக்கும் கோபியரின்) சந்தேகத்தை வலுப்படுத்துவதாய் அமைந்துள்ளதை அவதானிக்க வேண்டும். அதாவது, துளசியின் வாசம் வீசும் இடத்தில் கண்ணன் வாசம் செய்கிறான் என்ற விஷயம் கோபியர் அறியாததில்லையே!
துளசிக்கு வைணவத்தில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. பாற்கடல் கடைந்த காலத்தில் பிறந்த துளசி தனக்கு மிகவும் உகந்தது என்று கண்ணனே அருளியிருக்கிறான். ஏன் விஷ்ணுசித்தர் ஆண்டாளை கண்டெடுத்ததே ஒரு துளசிச் செடியின் அடியில் தான்!
பெரும் தவம் செய்து பிரம்மனிடம் "நித்தியத்துவத்தை" வரமாக கேட்க நினைத்த கும்பகரணன், (கலைவாணியின் திருவிளையாடலால்) நாக்கு குளறி "நித்திரத்துவத்தை" வரமாக கேட்டு விட, தன் வாழ்வின் பெரும்பகுதியை தூக்கத்தில் கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனுக்கு அது துர்பாக்கியம், தேவர்களுக்கோ அவன் உறக்கத்திலிருந்ததே பெரும்பாக்கியம்!
ஆக, சற்று எரிச்சலில் தான் வெளியில் இருக்கும் கோபியர், 'கும்பகரணனையே உறங்குவதில் தோற்கடித்து, அவனது பெருந்துயிலையே பரிசாகப் பெற்றவள் போல தூங்குகிறாயே' என்று தூங்குபவளை இடித்துரைத்தனர்.
நாற்றத்துழாய் முடி நாராயணன் என்று கண்ணனின் வெளித் தோற்றத்தழகை பாடிய ஆண்டாள், அதே நாராயணன் தான் ஸ்ரீராமன் எனும்போது, ராமனே புண்ணியத்தின் மொத்த வடிவம் என்று போற்றுவதை (போற்றப் பறை தரும் புண்ணியனால்) கவனிக்க வேண்டும்! "ராமோ தர்மவான் விக்ரஹ" என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
'நமது நற்பலன்களால் மட்டுமே மோட்சம் சித்திக்காது, நம்மை ரட்சிப்பதும், தடுத்தாட்கொள்வதும் அப்புண்யனின் பெருங்கருணையே' என்பதை கோதை நாச்சியார் குறிப்பில் உணர்த்துகிறார்! அதனால் தான் வெளியில் நிற்கும் கோபியர் "பரமனை எப்படிப் பற்றுவது" என்று துடிக்கையில், உள்ளிருப்பவளால் (எல்லாவற்றையும் கண்ணனிடம் ஒப்படைத்து விட்டு!) நிச்சிந்தையாக தூங்க முடிகிறது போலும் :)
பரமனை அடைவது மோட்சமானாலும், அதுவும் பரமானாலேயே வாய்க்கப்பெறும் என்பது தான் இப்பாசுரத்தின் அடிநாதமான செய்தி.
"கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்" என்ற பிரயோகத்தை அவதானிக்க வேண்டும். ஆண்டாள் புண்ணியனான ராமன் அவ்வசுரனை வதம் செய்தான் என்று பாடவில்லை! மற்ற அசுரர்கள் தாங்கள் போரிடுவது பரமனோடு என்பதை உணரவில்லை. ஆனால் கும்பகரணனோ அது அறிந்தே (செஞ்சோற்றுக் கடனுக்காக!) ராமனுடன் பெரும்போரிட்டு மரணத்தைத் தழுவினான்! கும்பகரணன் கூற்றத்தின் வாயில் வீழ்ந்தாலும், பரமன் அவனுக்கு மோட்சம் அளித்தான்.
அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய் - 'பெண்ணே, நீ கிடைத்தற்கரிய ஆபரணம் போல் அழகானவள். அதனால், தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறக்காமல், முக ஒளி பிரகாசிக்க (தேஜஸாய்) கதவைத் திறந்து கொண்டு வா' என்று கொள்வது ஒரு வகை! "நீ தூங்கி வழியும் முகத்தோடு வந்தால் கூட, (தேற்றமாய்) தேஜஸாய் தான் இருப்பாய், உடனே கதவைத் திற" என்று கொள்வதும் நயம் தான்!
**********************************
நான் ஏற்கனவே புள்ளும் சிலம்பின காண் என்ற 6வது திருப்பாவைப் பாசுரப் பதிவில் சொல்லியபடி, 6வது பாசுரம் தொடங்கி 15வது வரை உள்ள பத்து பாசுரங்கள் முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை.
இவை பத்து ஆழ்வார்களை (மதுரகவியாழ்வார், ஆண்டாள் தவிர்த்து) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகம் உண்டு ! மதுரகவியார் நம்மாழ்வருக்குள் அடக்கம் என்பதால் அவரை தனியாக துயிலெழுப்ப ஆண்டாள் நாச்சியார் துணியவில்லை :-)
இந்த 10 திருப்பாவைப் பாசுரங்களும் (6-15) ஆண்டாளின் "ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி"யாகக் கருதப்படுகிறது. ஆழ்வார்களுக்கான கோதை நாச்சியாரின் சுப்ரபாதம் இது! தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்து, தனக்குப் பின்னால் அவதரிக்கவிருக்கும் 3 ஆழ்வார்களின் (தொண்டரடிபொடி, திருமங்கை, திருப்பாணாழ்வார்) திருப்பள்ளியெழுச்சிக்கும் சேர்த்தே ஆண்டாள் நாச்சியார் திருப்பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிட வேண்டியது.
பாசுரச் சிறப்பு:
இப்பாசுரம் முதலாழ்வர்களில் முதலாவதாக வரும் பேயாழ்வாரை துயிலெழுப்புவதாக ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!
திருக்கோவலூர் கோயிலை அடைந்த முதல் மூன்றாழ்வார்களில், பொய்கையாரும், பூதத்தாரும் பெருமாளுக்கு இரு விளக்குகளை ஏற்றினர். இதை நோன்பு நோற்பதாக (நோற்று!) கொண்டால், உபய அனுஷ்டானம் செய்யப்பட்டு விட்டதல்லவா?
முதலடியிலேயே ஆண்டாள் "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" என்று விளிப்பதைப் பாருங்கள். பேயாழ்வார் தனது திருவந்தாதியை பாடுவதற்கு முன்பாகவே, பெருமாளின் திவ்ய தரிசனத்தை காணும் பெரும்பேறு பெற்றவர். அவ்வாழ்வாரின் முதல் பாசுரத் தொடக்கமே, "திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று தொடங்குவதாம்!
அது போலவே, திருக்கோவலூர் கோயிலில் முதலில் நுழைந்த பொய்கையார் கதவை மூடி விட்டார். பின் வந்த பூதத்தாருக்கு அவர் கதவைத் திறந்தார். கடைசியாக வந்த பேயாழ்வாருக்கு பூதத்தார் கதவைத் திறந்து விட்டார். ஆனால், பேயாழ்வாருக்கு அடியவர் வேறொருவருக்கு கதவைத் திறக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனாலேயே, "வாசல் திறவாதார்" என்ற சொற்பதம் பேயாழ்வாருக்கு மிக மிகப் பொருத்தமான ஒன்றே :-)
"நாற்றத் துழாய்முடி நாராயணன்" என்பது இந்த ஒரு பாசுரத்தில் மட்டுமே ஆண்டாள் எடுத்தாண்டுள்ளார். ஏனெனில், பேயாழ்வாருக்கு திருத்துளசி மேல் பெருங்காதலுண்டு! திருத்துழாயை தனது பல பாசுரங்களில் அவர் பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்தவர்.
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய்,*அன்று திருக்கண்டு கொண்ட* திருமாலே
மலராள் தனத்துள்ளான்* தண்துழாய் மார்பன்,
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த* வண்டறையும் தண்துழாய்,* கண்ணனையே காண்க
அரும்பும் புனந்துழாய் மாலையான்* பொன்னங் கழற்கே,* மனம்துழாய் மாலாய்
தண்துழாய்த் தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும்
திருமழிசை பிரானை துயிலெழுப்பும் முந்தைய (9வது) பாசுரத்தில், ஆண்டாள் அவர் "அனந்தலோ?" என்று ஐயம் கொள்கிறாள். இதில் "ஆற்ற அனந்தலுடையாய்" என்று சொல்வதை வைத்து, திருமழிசையாரின் ஆச்சார்யனான பேயாழ்வாரையே இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார் என்பதும் ஏற்புடையதே!
அது போல, "அருங்கலமே" என்று பேயாழ்வாரை அழைப்பதும் ஏற்புடையதே! பெருமானின் திவ்ய தரிசனத்தை பிரபந்தம் பாடத் தொடங்கும் (திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்!) கணத்திலேயே அனுபவிக்கப் பெற்ற பேயாழ்வார் கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவர் தானே, இதிலென்ன சந்தேகம்!
குருபரம்பரை சம்பிரதாயப்படி, இப்பாசுரம் பெரிய நம்பியை (பராங்குச தாசர்) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகமும் உண்டு. பெரிய நம்பி உடையவரின் ஆச்சார்யன் ஆவார்.
பாசுர உள்ளுரை:
பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில் (நோற்று) கர்மயோகத்தை கடைபிடிக்காவிடினும் (வாசல் திறவாதார்) எவ்வித தடங்கலுமின்றி (மாற்றமும் தாரார்) அவ்வடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கப் பெறுகிறது (சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்).
இங்கு "பெருந்துயில்" என்பது அறியாமையையும், "கூற்றம்" என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பவையாம். இவையே பரமனைப் பற்றுவதற்கு தடைகளாக இருக்கின்றன.
இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபியர் குலப்பெண் தன்னை பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டிருப்பவள்! இவ்வடியவள் ஓர் உத்தம அதிகாரி ஆவாள். இவள் கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்!
(அவளுக்கு மட்டுமே ஆனந்தம் தரும்!) அவளது ஆத்ம அனுபவத்திலிருந்து வெளிவந்து தங்களது அகங்காரத்தையும், அஞ்ஞானத்தையும் விலக்கி, நல்வழி செலுத்தி,தங்களது உய்வுக்கு உதவுமாறு, கோபியர், உறங்கும் (ஞானமிக்க) அடியவளை வேண்டுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
இப்பாசுரத்தில் "சுவர்க்கம்" என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார் பகவத் அனுபவத்தை) குறிக்கிறது. இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.
மற்றொரு விதத்தில் சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்
அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பது புலனாகிறதல்லவா?
அருங்கலமே என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
கிடைத்தற்கரிய 1. பாத்திரம் 2. அணிகலன்
அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளை தேக்கி வைக்கும் பாத்திரமாகவும், மனதூய்மை, பக்தி, தர்ம சிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்வ குணங்களாகிய அணிகலன்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.
பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்தி கூர்மையும் ஞானமும், அகங்காரத்தைத் தந்து (ஒருவரை) திசை திருப்பி விடும் அபாயத்தையும், இறை சேவையும், சமூக சேவையும் கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் செய்தியாக இப்பாசுரத்தை காண முடிகிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா
***491***
பென்சில் ஓவியம் நன்றி: தேசிகன்
9 மறுமொழிகள்:
Test !
பாலா,
மிக அருமையான ஆதார விளக்கங்கள். கீசு கீசு வென்ற பாசுரத்துக்கும் பின்னூட்டத்தில் நீங்கள் தந்திருக்கும் ஆதார விளக்கங்கள் மிக அருமை. மிக்க நன்றி. சுவர்க்கம், அருங்கலமே இரண்டுக்கும் அளித்திருக்கும் வித்தியாசமான விளங்கங்களும் மிக அருமை. நல்ல சேவை. தொடருங்கள். வாழ்த்துகள்.
மின்னல்
நல்ல விளக்கம் பாலா!
பேயாழ்வாரின் துழாய்க் காதலை, துழாய் வரிகளை இங்கு எடுத்தாண்டமைக்கும் நன்றி!
//ஆண்டாளின் "ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி"யாகக் கருதப்படுகிறது. ஆழ்வார்களுக்கான கோதை நாச்சியாரின் சுப்ரபாதம் இது!//
இப்படி முதலில் வியாக்யானம் செய்தது யார் பாலா?
ஈடுகளில், ஆயிரப் படிகளில் இப்படி மற்ற ஆழ்வார்களை விழிக்கச் சொல்லும்படியான விளக்கங்கள் வருகிறதா? யார் செய்த ஈட்டில்?
அருமையான விளக்கங்கள் பாலா. திருத்துழாயின் சிறப்பினை ஆண்டாள் ஆழ்வார் பாசுரங்கள் மூலம் நன்றாக எடுத்துக் காட்டியுள்ளீர்.
மின்னல்,
நன்றி. நான் வாசித்து/கேட்டு அறிந்தவற்றை எளிமையாக, சுவையாக சொல்ல ஒரு முயற்சி, அவ்வளவே.
கண்ணபிரான்,
//இப்படி முதலில் வியாக்யானம் செய்தது யார் பாலா?
ஈடுகளில், ஆயிரப் படிகளில் இப்படி மற்ற ஆழ்வார்களை விழிக்கச் சொல்லும்படியான விளக்கங்கள் வருகிறதா? யார் செய்த ஈட்டில்?
//
இந்த விஷயம் எனக்குத் தெரியாது, ஆனால், இந்த "திருபள்ளியெழுச்சி" அன்னங்கராச்சார் உரையில் உள்ளது என்று ஞாபகம். அது போல, வடகலை சம்பிரதாயத்தில் வரும் வியாக்கனங்களில் துயிலெழுப்படும் ஆழ்வார்கள் மாறி இருப்பர்.
ராகவ்,
நன்றி, வாசிப்புக்கும் பாராட்டுக்கும்.
எ.அ.பாலா
அருமையான பொறுமையான விளக்கங்கள் சீனியர். நன்றி.
குமரன்,
//
அருமையான பொறுமையான விளக்கங்கள் சீனியர். நன்றி.
//
அடியேன் தன்யனானேன் :)
I have added more information and pics and republished this thiruppavai pasuram posting
Excellent. As always.
Post a Comment